14 July, 2012

வலிக்கிறது தோழர்களே

வாகன விபத்துக்குப் பிறந்து, வளர்ந்து வரும் இந்த வலிக்கு 
இன்று முதல்பிறந்தநாள் நண்பர்களே.
வாருங்கள்
சிறிது சதைகளை வெட்டி 
கொஞ்சம் ரத்தம் சிந்தி
சின்னஞ்சிறு சிராய்ப்புகளைப் பரிசளித்துக் கொண்டாடுவோம்.
யாராவது மூர்ச்சையுற்று விழுவதாய் இருந்தால்
விழா இன்னும் சிறக்க வாய்ப்புண்டு.
புகைப்படம் எடுப்பவர்கள் விபத்தின் கசகசப்பை
உயிர்ப்பித்துத் தந்தால் பேருபாயமாக இருக்கும்.
விபத்து விசாரிக்க மருத்துவமனை வந்து
தலையிலடித்து அழுதுவிட்டு தலப்பாகட்டி பிரியாணி
எங்கு கிடைக்குமெனக் கேட்ட உறவுகளும் வரலாம்.
விழாவில் கண்ணீர் வரவழைக்கும் பானம்
கண்டிப்பாகப் பரிமாறப்படும்.
தவிரவும்
இந்த வலிக்கு ஒரு பெயரையும் சூட்டிவிடலாம்
என்றிருக்கிறேன்.
வலி என்று இருப்பதாலே வளர வளர
அளவுக்கதிகமாக வலிக்கிறது தோழர்களே.

4 comments:

நிலாமகள் said...

விபத்து விசாரிக்க மருத்துவமனை வந்து
தலையிலடித்து அழுதுவிட்டு தலப்பாகட்டி பிரியாணி
எங்கு கிடைக்குமெனக் கேட்ட உறவுகளும் //

சிரித்து தான் ஆற்ற‌ வேணும்.

வினோத‌மான‌ பாடுபொருள்க‌ளில் வித்தியாச‌மான‌ க‌ற்ப‌னைக‌ளுட‌னான‌ உங்க‌ க‌விதைக‌ள் ர‌சிக்க‌த் த‌க்க‌வையாக‌...

ஹ ர ணி said...

அன்புள்ள கதிர்பாரதி..


நம்முடைய தேவைகளை நம்மின் வலியின் ஊடாகத்தான் நிறைவேற்றிக்கொள்கிற சூழலே இச்சமுதாயத்தில் நிலவுகிறது. விபத்து நிகழ்வு குறித்து நமக்குள் ஒரு விழிப்புணர்வு இருந்தும் இதன் பின்னணியில் பல இடையூறுகளும் காரணங்களும் இருக்கின்றன. நாம் கவனமாக இருக்கவேண்டும் எல்லாவற்றின் எதிர்விளைவுகளுக்கும் என்றுதான் எனக்குத் தோணுகிறது. வலி எப்போதும் வலிதான். பொறுத்துக்கொள்ளலிலும் பொறுத்துக் கொள்ளமுடியாத நிலைப்பாட்டிலும் அது தன் வடிவ்த்தில் வேறு உருக் கொள்கிறது.

manichudar blogspot.com said...

மறக்க முடியாத விபத்தின் வலியை கிளறிவிட்டது உங்கள் கவிதை.

கிருஷ்ணப்ரியா said...

வலிகளைக் கூட கொண்டாடத் தெரிகிறது உங்களுக்கு.. இதைக் கூட கவிதையாக்கலாம் என்ற உங்கள் கற்பனை வியக்க வைக்கிறது.... வார்த்தைகளின் தேர்வும், அதை வளைக்கும் வித்தையும் கைவரப் பெற்றிருக்கும் உங்கள் கவிதைத் தொகுப்பைப் பார்க்க ஆவலாய் இருக்கிறது கதிர்.....