எருக்கம்புதர்கள் மண்டிக்கிடக்கும்
இந்த வீடு மட்டும்தான் ஒருகாலத்தில்
வசீகரமிக்கதாக இருந்தது
ஒளிபொருந்தியதாகவும் இருந்தது
அந்தத் தெருவிலேயே
புறா வளர்ந்த அந்த வீடுதான்
ஓர் இறகுபோல மேலெழும்பிப்
மிதப்பதாகவும்
லயத்தோடு கசியும் இசைதான்
வீடாகிவிட்டதாகவும் தோன்றும்
இந்த வீட்டின் துளசி வாசத்தில்
மயங்கிய
பதின்பருவத்துத் தடயங்கள்
இவ் வீட்டைப்போலவே
சிதிலமாகிவிடவில்லை இன்றும்
புறாக்கள் இரையுண்ட
அவ் வீட்டின் கிணற்றடி
எப்படிப் பார்க்கும் தைரியம்
நரைக்குக்கூட இல்லை
அதற்குள்
தேங்கி இருண்டிருப்பது
தண்ணீரல்ல
உன் கேவல்
4 comments:
அதற்குள்
தேங்கி இருண்டிருப்பது
தண்ணீரல்ல
உன் கேவல்/
மனக்கிணற்றிலும் கேவல் எதிரொலிக்கிறது!
மனதை அசைக்கும் கவிதை. வார்த்தைகள் ஊதுவத்திப்புகை போல இன்னமும் சுழன்றபடி இருக்கின்றன கதிர்.
கவிதை ரொம்ப நல்லாயிருக்கு.
simply superb! u r rocking always
Post a Comment