மூதாதையரடி மூதாதையராக அது
அவனிடம் \ அவளிடம் வந்து சேர்ந்திருக்கிறது
புற்றுக்குள் நுழைந்துவிட்ட எலி
பாம்பு கண்டதும் பதறித் திரும்புமே
அந்தப் பதட்டத்தோடே வைத்திருக்கிறது
எப்போதும்
காய்ந்தெரிக்கும் கோடையின் மாநகரச் சாலையில்
கானலெனப் பிசுப்பிசுக்கிறது
நீருக்கேங்கி வெடிப்புறும் கரம்பையில்
சிலுசிலுவெனக் கசியும் ஈரமாகிறது
மேனியை யாழ்க்கம்பியாக்கி
மீட்டெடுக்கும் இசையில் களிப்புறுகிறது
அந்த இசையில் உலாத்துகையில்
அவன்\அவள் பறவையாவது நிச்சயம்
அல்லது சிறகளாவது முளைக்கும்
கிளையிலிருந்து கழன்றுவிட்டப் பழமாக
உதடுகளுக்கு எட்டாத முத்தமாக
நடுநிசியில் இளம்விதவை தலைக்கு ஊற்றும் நீராக
சீறும் நாகம் கக்கும் முதல் துளி விஷமாக
யாவுமாகவும் இருக்கிறது
இல்லை யாவுமற்று
அதுவாகவே இருக்கிறது அது
3 comments:
மேனியை யாழ்க்கம்பியாக்கி
மீட்டெடுக்கும் இசையில் களிப்புறுகிறது
அந்த இசையில் உலாத்துகையில்
அவன்\அவள் பறவையாவது நிச்சயம்
அல்லது சிறகளாவது முளைக்கும்
Nice...
நீருக்கேங்கி வெடிப்புறும் கரம்பை.. ம்ம் மண் மணம்.. சுவாசிக்கத் தோன்றும் அற்புதம். எல்லாமும் அதுவாகவே இருக்கிறது..:)
நல்லாயிருக்கு... வாழ்த்துக்கள்.
Post a Comment