30 August, 2011

ஆயிற்றா?

முக்காலத்திலும் கால் பரப்பியிருக்கும்
முனிவனிடம் வந்தது புழுவொன்று
சுவாமி எம்மை கோழி செய்வீரா
கோழிகளெல்லாம் கொத்திக் கொத்தி
சித்திரவதைக்கின்றன
முறுவலித்துக்கொண்டே சொன்னான் முனி
செய்தோம்
ஆயிற்று புழு கோழியாக

கோழியை விரட்டிக் கடித்தது கடுவன்பூனை
மீண்டும் முனிவன் காலடி வந்தது கோழி
சுவாமி எம்மை பூனை செய்வீரா
செய்தோம்
சிறகுகள் உதிர உதிர
மெதுகால்களில் நகங்கள் முளைத்து
பூனை பிரசன்னமானது

பட்டுமேனி உதறி சோம்பல் முறிக்கையில்
கடைவாயில் எச்சிலொழுக நாய் நெருங்கியதும்
விதிர்விதிர்த்தது பூனை
மீண்டும் முனிவனிடம்... மீண்டும் செய்தோமென்றான்
பூனை நாயாகிப் பூரித்தது

நாயின் ராஜநடை மனிதன் எறிந்த கல்லில் இடற
ஓலமிட்டபடி ஓடிவந்த நாய்
எம்மை மனிதனாக்கினால் நல்லது
ஆக்குவீரா முனிவனே என்றது
ஆயிற்று நாய் மனிதனாக

அநாதையாக இறந்துகிடந்தவனை
புழுக்கள் மொய்த்துக் கிடந்தன
பார்த்த மனிதன் பதறினான் முனியிடம்

முனியே...
எம்மை புழுவாக்கிவிடும் என்றபோதே
மனிதன் புழுவானான்

மீண்டும் முறுவலித்தான் முனி
ஆயிற்றா?

8 comments:

ராமலக்ஷ்மி said...

அருமை:)!

'பரிவை' சே.குமார் said...

Super... Vazhththukkal.
namma pakkamum vanga sir.

Thenammai Lakshmanan said...

மிக அருமை கதிர்ஜி..:)

குமரி எஸ். நீலகண்டன் said...

நல்ல கவிதை..

கே.வி.எஸ். said...

மிகவும் அருமையாக கவிதை....

Unknown said...

நல்ல கவிதை அன்பரே!

புழு மீண்டும் புழுவான
கதை அருமை அருமை!

என் வலைப்பக்கம்
வாருங்கள்

புலவர் சா இராமாநுசம்

அனைவருக்கும் அன்பு  said...

கதை கவிதையாகிறது .......அருமை

Unknown said...

எப்பிறப்பும் ஏமாற்றமுடையது.

மாற்றமுடையது.