கக்கடைசியில் கல்வாரிக்கு அடித்திழுத்துப் போகிறாம்
எம் மனுஷ்யகுமாரனை
மனக்கசடு தோய்ந்த பரிகாசத்தோடும் - அவன்
காயங்களில் வழியும் நிணத்துக்கிணையான குரூரத்தோடும்
ஆறுதல் தரமுற்படுவோருக்கும் அவன் பாடுகளின்
துயரம்தான் கிட்டுமென்ற எச்சரிக்கையோடும்
தாளாது துவழும் அவன் காலடிகளைக்
கசையடிகளால் இம்சிக்க மறக்கவில்லை
அவன்பொருட்டு யாரேனும் கண்ணீர் உகுக்க நேர்ந்தால்
இம்சையை இரட்டிப்பாக்கவும் தவறவில்லை
மனுஷ்யகுமாரனின்
அத்தனை துயரங்களையும் கண்ணுற்ற எம் கண்கள்
வேசியின் வசப்பட்ட புலனாய்க் களிப்பால் திளைக்கிறது
அவன் தாகமென்று துவண்டபோது
திராட்சை ரசத்தில் எக்களித்த நாவுகளை இன்றும்
பாதுகாத்துக் கடத்துகிறோம் எம் சந்ததிகளுக்கு
தள்ளாடித் தள்ளாடி மனுஷ்யகுமாரன்
இழுத்துப்போகிற சிலுவைமரத்தின் அடிநுனியின்
தேய்மானத்திலிருந்து கசிந்துகொண்டே இருக்கிறது
எப்போதுபோல எம்மீதான கிருபை
மனுஷ்யகுமாரன் தொட்டுக் குணமளித்த
கரங்களைக் எம்மிடம் கையளித்துவிட்டு
சாந்தசொரூபியாய் முறுவலிக்கையில்
மனசின் வேசை திடுக்கிடுவதை மறைக்க
அடித்து இறக்கினோம் ஆணிகளை
விசணமுற்ற எம் குத்தீட்டிகள்
தூக்கிநிறுவிய சிலுவையில் தொங்கும் மனுஷ்யகுமரனின்
விலாநோகக் குத்தி உயிர்சோதிக்கையில்
பெருக்கெடுக்கும் ரத்தத்தில் நனைகிறது
அங்கலாய்த்த பெண்களையும் அவர்தம்
இறுக்கமுற்ற குழந்தைகளையும்
எம் கொடும் பார்வைகளால் அமர்த்தி
வழித்தவறிய மனுஷ்யகுமாரனின் மறியை
பிதாவின் பெயரால் பலிகொடுத்துவிட்டு
வீச்சமடிப்பது அதன் மாமிசம்தானென்கிறோம்
8 comments:
கதிர், அடர்ந்த கவிதை, வாழ்த்துக்கள்.
விரிகிறது மனதில் உங்கள் கவிதை சித்திரம் சிலுவையுடன்
நீலகண்டன்
விரிகிறது மனதில் உங்கள் கவிதை சித்திரம் சிலுவையுடன்
நீலகண்டன்
ரொம்ப அருமையா வந்திருக்கு.
அப்பா!!
புரட்டுகிறது கதிர் சார்!
(நான் தற்போதான சூழலுடன் பொருத்திக் கொண்டேன்.)
யதார்த்தத்தின் மீதான கோபமும் விழ்ந்து கிடக்கும் மனிதத்தின் மீதான அக்கறையும் உள்ள கவிதை...... ,'விசனமுற்ற' என்று இருக்கவேண்டும் . ண வரக்கூடாது ..
மற்றுமொறுமுறை மனுஷ்யகுமாரனின் பலி கொடுத்தலை மனக்கண் முன் நிகழ்த்திக் காட்டிய உணர்வு.
மனுஷ்யகுமாரன் தொட்டுக் குணமளித்த
கரங்களைக் எம்மிடம் கையளித்துவிட்டு
சாந்தசொரூபியாய் முறுவலிக்கையில்
மனசின் வேசை திடுக்கிடுவதை மறைக்க
அடித்து இறக்கினோம் ஆணிகளை
/// ஐயோ..:((
Post a Comment