காற்றில் அடித்துக்கொணரப்பட்ட
கிழிந்த நாட்காட்டித் தாளைப் போலவும்
கறுத்துத் திரண்ட பாறையின்மீது
மோதிச் சரிகிற அலையைப் போலவும்
எனக்குச் சம்பவித்திருக்கிற இந்நாளுக்கு
நேற்றைய இயலாமையின் கழிவிரக்கமும்
எதிர்க்கால அச்சமும் முகமாயிருந்தது
எனது வலது பாரிசத்தில் கிடத்தி
ஆசுவாசப்படுத்தத் தாலாட்டினேன் அந்நாளை
நோயுற்ற குழந்தையின் கடவாயில்
மருந்து புகட்டும் சங்கின் வடிவில்
என் சொற்களை வடித்துக்கொண்டு
பருக்கினேன் துளி தைரியத்தை
வாலைக் குமரிகளின் யவ்வனம் கொப்பளிக்கும்
கூடுமிடங்களுக்குக் கூட்டிப்போய்
கிளர்ச்சியூட்ட எத்தனித்தேன்
புராதனமிகு கோயிலுக்குள் நடத்திச்சென்றபோது
அங்கிருந்து விடுபட மறுத்து எதெதையோ இட்டுக்கொண்டு
உதம்பியபடியேயிருந்த அந்த நாளின் மனம்
மார்கழியின் ஈரக்காற்றுத் தீண்டிய
சதைத் துண்டங்களாய் நடுக்கமுறுவதை
அவதானிக்க முடிந்தது
துக்கத்தின்பால் தோய்ந்துகிடக்கும்
துஷ்டிவீட்டைப் போல இருளத் துவங்கிய அந்நாளை
கபிலனிடம் ஒப்படைத்துவிட்டு உறங்கிப்போனேன்
அதிகாலை உறக்கம் விழிக்கையில்
நாளிலிருந்து என் சாயலில்
ஒரு பொம்மையை உருவாக்கிவிட்டு
புன்னகையை அணைத்தபடிக்கு
உறங்கிக்கொண்டிருந்தான்
நன்றி: உயிர் எழுத்து(மார்ச்2011)
4 comments:
மொத்த கவிதையும் மிக அற்புதமாக வந்திருக்கிறது, கதிர் பாரதி சார்!
// நோயுற்ற குழந்தையின் கடவாயில்
மருந்து புகட்டும் சங்கின் வடிவில்
என் சொற்களை வடித்துக்கொண்டு
பருக்கினேன் துளி தைரியத்தை//
//அதிகாலை உறக்கம் விழிக்கையில்
நாளிலிருந்து என் சாயலில்
ஒரு பொம்மையை உருவாக்கிவிட்டு
புன்னகையை அணைத்தபடிக்கு
உறங்கிக்கொண்டிருந்தான்//
beautiful!
பேசாமல் கபிலனை என்னிடம் தந்துவிடுங்களேன். என்னிடமும் இதே போன்ற நாட்கள் நிறைய உள்ளன. :-)
கவிதை மிக அற்புதமாக வந்திருக்கிறது சார்.
Arumai....
mudinthal namma kadaikkum (Http://vayalaan.blogspot.com) vandhuttup ponga sir.
kavithai arumai kathir.
கவிதை நன்று. தலைப்பே கவிதை போல இல்லை இருக்கு
Post a Comment