10 November, 2010

ஓவியங்களுக்குள் ஊடுருவும் பாதச்சுவடுகள்

ஆதிவாசிகளின் குகை ஓவியங்களுக்கு நிகராய்
மிகு புராதனமான எனது தனிமைக்குள்
உங்கள் சந்தையைப் பரப்பிவிட்டீர்கள

எனது தனிமையை அலங்கரிக்கும் ஆலாபனையை
உங்களால் விளங்கிக்கொள்ள இயலாது
ஆதவனை உள்வாங்கி கிளர்ச்சி தரும்
இரவல் வெளிச்சம் அதிலில்லை

ஆதுரமிக்க வார்த்தைகளின் கதகதப்பில்
கிறக்கமுற்ற கவிஞனின் மோனத்தாலான
எனது தனிமையின் நுழைவாயில்
உங்களுக்கு ஒவ்வாமை தரவல்லது

மின்மினியின் ஒளிப்பிரிகையால்
ஊமத்தம்பூவின் சுகந்தத்தால்
ஓரேர் உழவனின் வியர்வையால்
கிட்டும் கௌரவம் போதுமானது
எனது தனிமைக்கு

ஆசீர்வாதங்களையும் வாக்குத்தங்களையும்
முற்றாக நிராகரித்துவிட்ட எனது தனிமைமீது
படர்ந்திருக்கும் சாபத்தால் ஒரு பலனுமில்லை

உங்களின் ஆக்டோபஸ் வாழ்வதற்குரிய
சீதோஷணமில்லா நிலம்தான்
எனது தனிமையின் ஆளுகை கீழிருப்பது

ஏதேதோ அடைய தவமிருக்கிற
உங்கள் கொக்கின் ஒற்றைக் காலடியில்
அடங்கிவிடும் அதற்குள்தான்
உங்கள் சந்தையைப் பரப்பியிருக்கிறீர்கள்

லாபங்களைக் கணக்கிட்டுச் சோர்வுறுவதற்குள்
நீங்கள் திரும்பிவிடுதலே உத்தமம்
கூடவே பாதச்சுவடுகளையும் அள்ளிக்கொண்டு

நன்றி: காலச்சுவடு (ஜனவரி 2011)


3 comments:

Sugirtha said...

என்ன அருமையான கவிதை!!!

//
ஆதிவாசிகளின் குகை ஓவியங்களுக்கு நிகராய்
மிகு புராதனமான எனது தனிமைக்குள்
...//

ஆதிவாசிகளின் குகை ஓவியங்களுக்கு நிகரானது எனது தனிமை ... அட! இதைவிடவும் தனிமையை அழகாய் விவரிக்க முடியுமா என்ன?


//எனது தனிமையை அலங்கரிக்கும் ஆலாபனையை
உங்களால் விளங்கிக்கொள்ள இயலாது
ஆதவனை உள்வாங்கி கிளர்ச்சி தரும்
இரவல் வெளிச்சம் அதிலில்லை //

--- வாவ்!!

//மின்மினியின் ஒளிப்பிரிகையால்
ஊமத்தம்பூவின் சுகந்தத்தால்
ஓரேர் உழவனின் வியர்வையால்
கிட்டும் கௌரவம் போதுமானது
எனது தனிமைக்கு//

என்ன சொல்றது இந்த வரிகளை... superb!


//ஆசீர்வாதங்களையும் வாக்குத்தங்களையும்
முற்றாக நிராகரித்துவிட்ட எனது தனிமைமீது
படர்ந்திருக்கும் சாபத்தால் ஒரு பலனுமில்லை//

:)

ரொம்ப பிடிச்சதுங்க இந்த தனிமைக் கவிதை...

உயிரோடை said...

கவிதை நன்று.

நிலாமகள் said...

//மின்மினியின் ஒளிப்பிரிகையால்/
ஊமத்தம்பூவின் சுகந்தத்தால்/
ஓரேர் உழவனின் வியர்வையால்/
கிட்டும் கௌரவம் போதுமானது
எனது தனிமைக்கு//

தனிமையின் விவரிப்பில் சுயபச்சாதாபம் ஓரிழையாய் ஊடுருவக் கண்டிருக்கிறேன். தங்களுடையதில் கம்பீரம் கலந்த கர்வம் இழையோடுவதை வியந்து ரசிக்கிறேன்.