24 April, 2010

கவிகிறது மெழுகின் சாட்சியோடு

தீ தின்னும் மெழுகை சாட்சி வைத்து
தன் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடும் இரவு
வாதையின் கூடாரமென
சன்னமாய்க் கவிகிறது அவள் மீது

முகமன் சொல்லி வரவேற்கும்
அவள் முறுவலின் பின்புறத்தில்
சலசலக்கும் ரணங்களின் கண்ணீரில்
மேலதிகமாய் இருள்கிறது அவ்விரவு

வடிக்கட்டமுடியாத வக்கிரம்
இயலாமையின் கழிவிரக்கம்
அந்தரங்கத்தின் வெக்கை
கொண்டாட்டத்தின் எச்சம்...
யாவற்றையும் அவளுக்குள் துப்பிவிட்டு
பேய் சிரிப்பில் அதிரும் அவ்விரவை
யார் பார்வைக்கும் படாதவாறு
பதட்டத்தோடு ஒளிக்கவே விழைகிறாள்
தீட்டுத் துணியென

4 comments:

நிலாரசிகன் said...

கடைசி வரியின் கனமும் கீழுள்ள வரிகளின் கச்சிதமும் அருமை நண்பா.

/முறுவலின் பின்புறத்தில்
சலசலக்கும் ரணங்களின் கண்ணீரில்
மேலதிகமாய் இருள்கிறது அவ்விரவு//

நேசமித்ரன் said...

அருமை ! கடைசி வரி.

உயிரோடை said...

கவிதையாக ரசிக்க முடியவில்லை

அண்ணாமலையான் said...

வாழ்த்துக்கள்.....