48வது புத்தகத் திருவிழாவில் நான் சேகரித்த 48 புத்தகங்களில் கைக்கு அடக்கமாக இருந்த அன்பு நண்பர் கதிர் பாரதியின் கவிதை தொகுப்பு "அம்மாவை மனை பாம்பு பார்த்துக் கொண்டிருக்கிறது" என்ற புத்தகத்தோடு இந்த புத்தாண்டை துவங்கினேன். இந்த புத்தாண்டு வெற்றிகரமான புத்தாண்டாக இருக்கும் என்ற நம்பிக்கை என் வானமெங்கும் கண்சிமிட்டுகிறது. நனைவதற்கு இதமாக அருவியைப் போல 60 லிருந்து ஒன்றை நோக்கி ஓடி வருகின்றன கவிதைகள்.
நீர்வீழ்ச்சி என்று தான் எழுத நினைத்தேன். விக்ரமாதித்தரின் கவிதை ஒன்று என் நினைவுகளை கண்டித்ததும் அருவி என்று திருத்திக் கொண்டேன். கவிதை என்ன செய்தது என்று நினைக்கும் போதெல்லாம், கவிதை என்னதான் செய்யவில்லை என்றே தோன்றுகிறது. வாழ்க்கையின் ஒவ்வொரு அங்குலத்திலும் கவிதை நுழையாத இடமில்லை.
இந்த கவிதை தொகுதியின் வாசிப்பு அனுபவத்தை எழுதுவதற்காக கவிதைகளை அடிக்கோடிட தொடங்கினேன் 60-வது கவிதையில் தொடங்கிய அடிக்கோடு ஒன்றாவது கவிதையில் வந்து நிற்கிறது.
ஆறுகள் ஏன் கடலை நோக்கி ஓடுகிறது என்று இப்போது புரிகிறது. பூமியை அவை அவ்வளவு ரசித்து ரசித்து கடக்கின்றன. நானும் அப்படி இந்த தொகுதி முழுவதையும் ரசித்து ரசித்து கடந்தேன்.
இதயத்தில் நீங்காத வலியாக தேங்கி விடக் கூடிய சொற்களை கொண்டு எழுதப்பட்ட கவிதைகள் என்று எனது ஆசான் கரிகாலன் தனது வாழ்த்துரையில் மிகச் சரியாக இத்தொகுதியை எடை போட்டு எழுதியிருக்கிறார்.
"வேப்பம்பூ மூக்குத்தியோடு
வீட்டுக்கு வந்தவள் அம்மா என
அவள் இல்லாத ஒரு கோடையில்
அப்பா சொன்னார்
அது
அடைக்கலம் குருவிக்கும் தெரியும்"
என்று ஒரு கவிதை முடிகிறது
ஒவ்வொரு கவிதையின் முடிவும் தழுதழுக்க வைக்கின்றன. இந்த கவிதை தொகுப்பை படித்து முடிக்கும் வரை உடைந்து அழுது விடக் கூடாது என்று உறுதியாக இருந்தேன்.
இன்னும் எவ்வளவோ உச்சங்களை கடக்க இருக்கிற நண்பரை அவர் ஒவ்வொரு உச்சியை அடையும் போதும் உச்சி முகர்வது நட்பின் பெருமை என்று நினைக்கிறேன்.
"பிள்ளை தூங்கி விட்டாலும்
தாய்க்கு பால் ஊறிக் கொண்டே இருக்கும்"
என்ற வரிகள் ஆகட்டும்
"இப்போதுதான் சிரைத்த புண் போல
ஓர் அம்மா" என்ற வரிகள் ஆகட்டும்
நெடு நாட்களாக மனதில் கடித்துக் கொண்டு கிடக்கும் உண்ணிகளை உதிரம் கசிய நீக்கும் விரல்களாக நம்மை ஆசுவாசப்படுத்துகின்றன
"நெடுநாள் கழித்து
வீடு திரும்பும் மூத்த மகன்
குறுக்கு விட்டம் பார்த்து
அம்மா என மறுகுகிறான்
கண்கள் கண்ணீரில் பளபளக்கின்றன
சுருக்கில் இருந்து
கழுத்தை தளர்த்திக் கொண்டு
கீழிறங்கி வந்த அவள்
மூக்கை உறிஞ்சியபடி
வாப்பா இப்பதான் வந்தியா
இரு சோறு போடுகிறேன் என்கிறாள்"
தன் அந்திம நேரத்தில் என் அப்பாவிடம் என் பாட்டி சொன்னாள் "எனக்கு ஜன்னி நடை பேசுகிறது. எல்லோரும் வயிற்றுக்கு சாப்பிட்டு விடுங்கள். நாளை சாவு எடுக்கும் வரை சாப்பிட முடியாது என்றாள்.
கண்களில் இருந்த வானம் கரையக் கரைய வீரபத்திரா என்று கைகளை உயர்த்தி என் தந்தை கதறினாரே
அந்த நினைவுகளை இந்த கவிதை ஏன் கிளர்த்தியது என்று எனக்கு தெரியவில்லை.
இந்தக் கவிதையை தொகுப்பை படித்ததும் அப்படியே அதிர்ந்து அமர்ந்து விட்டேன். கவிதை தாகத்தை போக்க இந்த தொகுதியை கையில் ஏந்தியவனுக்கு ஒரு கோப்பை உதிரத்தை சுடச்சுட கொடுத்தால் அதிர்ச்சியாக இருக்காதா?
"ஐந்து வயது வரை
வாய்ப்பேச்சு வரவில்லை
நாக்கில் அலகு குத்தி
காவடி தூக்கினாள் அம்மா
அவள் குருதியிலிருந்து
பெருகியதுதான்
என் எல்லா வார்த்தைகளும்"
என்கிறது ஒரு கவிதை
சொல்ல வார்த்தைகள் இல்லை நண்பா
வளம் கொழிக்கும் ஆண்டாக இந்தப் புத்தாண்டு அமையட்டும். நல்வாழ்த்துக்கள்.