பொருளை அடிப்படையாக்கிக்கொண்ட எதார்த்த உலகத்தில் உறவுகளை விட்டு வெகுதூரத்தில் வாழப் பழகி இருக்கிறோம் . இது பார்ப்பதற்கு மிகையாக இருந்தாலும் தனிமனித வாழ்வாதாரம் என்பதை பெருநகரங்களே தீர்மானிக்கின்றன. நம் உணவையும் உடைகளையும் வாழிடங்களையும் கூட கார்ப்பரேட் முதலாளிகள் தான் தேர்வு செய்கின்றனர்.
இப்படி சொந்த ஊரிலிருந்து சென்னையில் வந்து வாழ்ந்து கொண்டிருக்கும் கவிஞர்களில் ஒருவர்தான் கதிர்பாரதி, இவரது நான்கு தொகுப்புகளும் அனைவருக்கும் நன்கு பரிட்சயமானவை. பல விருதுகளையும் பெற்றவை.
கதிர்பாரதியின் சமீபத்திய கவிதைத் தொகுப்பான அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக் கொண்டிருந்தது தொகுப்பை வாசித்தேன். உலகின் மூலைமுடுக்குகளில் வாழும் அம்மாக்களை ஒருமுறை கட்டியணைத்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது.
அம்மாக்கள் அனைவரும் கொண்டாடப்பட வேண்டியவர்களா என்றால் ஆம் நிச்சயமாக. நமக்கெல்லாம் கிடைத்த அம்மாக்கள் அப்புராணிகள். அவர்களிடம் காளை மாடுகளை அடக்கும் வலிமை இருக்கும், ஏன் தன் குழந்தையைத் தாக்க வருகிறதென்றால் சிங்கம், புலியாக இருந்தால் கூட அடித்து விரட்டுவார்கள். அவர்களால் விரட்ட முடியாதது
அக்குளில் படிந்த வியர்வை நாற்றத்தையும், மற்றவர்களுக்காகவே உழைத்துத் தேய்ந்து சேர்த்து வைத்த மௌனத்தையும்தான்.
எங்கள் ஊரில் ஓர் அம்மா இருந்தாள் அவள் தன் இரண்டு குழந்தைகளையும் கணவனிடம் விட்டுவிட்டு தனக்குப் பிடித்த ஒருவனோடு போய்விட்டாள் அவளோடு சேர்த்து அந்தக் குழந்தைகளையும் ஓடுகாளி பெத்ததுக என்று ஊரே பேசியது. இன்னொரு அம்மா இருக்கிறாள் மகள் சம்பாரித்துக் கொண்டு வரும் சம்பளம் வரும் நாட்களில் மட்டுமே அம்மாவாக இருப்பாள். இன்னொருத்தியோ தன் காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொன்றுவிட்டு சிறைக்குப் போனாள். இன்னொருத்தி தன் மகன் செய்த தவறை மறைக்க
பக்கத்து வீட்டுப் பையன்களின் மேல் பழியைப் போடுவாள்.
ஏன் நானே சில நேரங்களில் நல்ல மகளாக இருப்பதாக நினைத்துக் கொண்டு நல்ல அம்மாவாக இல்லை என்று தெரியும்.
அம்மாக்கள் இல்லாத குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் வாய்ப்புக் கிடைத்தால் ஒருமுறை அந்த நிலவைக் காட்டி ஓர் உருண்டையை அதன் கடைவாயில் இழுக்கும்படி ஊட்டி அந்தக் குழந்தையின் சோறப்பிய முகத்தை ரசித்துப் பார்க்க வேண்டும் ஆனால் எத்தனை குழந்தைகளுக்கு ஊட்டிவிட முடியும். தாய்ப்பால் சுரக்காத அம்மாக்களும் கொடுக்க விரும்பாத அம்மாக்களும் , கைவிடப்பட்ட அம்மாக்களும், எந்த சூழலிலும் குழந்தைகளை கைவிடாத அம்மாக்களும் இங்கு உண்டு.
என்னைப் பொறுத்தவரை
உலகின் எல்லா அம்மாக்களுக்கும் ஒவ்வொரு நியாயம் உண்டு. அவர்களை அப்படி அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டியது இந்த சமூகத்தின் கடமை. ஏனென்றால் அவர்கள் பெண்கள். அவர்களின் நியாயம் இந்தப் பிரபஞ்சத்தை விட மூத்தது.அந்த வகையில் கதிர்பாரதியின் அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக் கொண்டிருந்தது மிக முக்கியமான தொகுப்பு.
அண்ணன் கரிகாலன் சொல்லியிருப்பது போல கதிர்பாரதியின் கவிதைகளுக்குள் வாழும் அம்மா தமிழ்ப்பிள்ளைகளின் அடையாளம்.
"அம்மாவின் வாழ்க்கையே
ஒரு ஒளியாங்கண்டு விளையாட்டுத்தான்" என்று தன் முதல் கவிதையைத் தொடங்கும் கவிஞர் பெண்களின் பாடுகளைப் புரிந்த ஒரு முற்போக்கான மகன்தான் என்பதை புரிந்துகொள்கிறோம் . இன்னொரு கவிதையில்,
அக்கா பருவமடைந்த பிற்பாடு
அப்பாவோடு சேர்ந்து
திண்ணையில் உட்கார்வதை
அம்மா கைவிட்டாள்
அப்பா சோப்புப் போட்டுக் குளிப்பதைத் தவிர்த்துவிட்டார்
இவையெல்லாம்
அம்மாவின் ஏற்பாட்டிலேயே நிகழ்ந்திருக்கும்
அப்பாக்களுக்கு அவ்வளவு இங்கிதம் கிடையாது
என்று எழுதும்போதுதான் சதா பெண்களைத் தியாகிகள் ஆக்கும் சராசரி ஆணின் மனநிலை எட்டிப் பார்க்கிறது.
அதற்காக ஒட்டுமொத்தத் தொகுப்பும் அப்படி இல்லை என்பதால் கவிஞரின் ஆண் மனம் வலிந்து திணிக்கப்படவில்லை.உணர்வுகளின் உட்சபட்ச உபசரணையில் சில இடங்களை நாம் கடந்து போனால் கதிர்பாரதி காட்டும் அம்மாவின் உலகில் அவள்தான் ராணி, அவள்தான் தளபதி, அவள்தான் எல்லாம்.
"வெறிச்சிட்டுக் கிடந்தது
கோடையுச்சி ஆகாயம்
காற்றுத் தள்ளிப்போக
அங்கே நீலத்தைத் தவிர பிறிதில்லை
"நீ போ
இந்த அநாதை மேகத்தை
வீட்டுக்கு அனுப்பிட்டு வர்றேன்'என்று
சொன்னபோது
முதன்முறையாக அம்மாவைப் பார்க்க
பயமாக இருந்தது."
"
தாத்தா மரணித்தபோது
‘எங்க அப்பன் நாடி அசைஞ்சா இந்த நாடே அசையுமே.
எங்க அப்பன் சீவன் அசைஞ்சா எந்த ஜில்லாவும் அசையுமே...' என ஒப்பாரியோலமிட்ட அம்மாதான் தாத்தாவோடு பத்து வருடங்கள்
வாய்பேச்சு இல்லாமல் இருந்தாள்."
இந்த இரண்டு கவிதைகளும்
என்னோடு பலவற்றை நினைவுபடுத்துபவையாக இருக்கின்றன. உங்களுக்கும் இருக்கலாம் . முழுமையான அனுபவத்திற்கு ஒரு முறை கொகுப்பினை வாசித்துவிடுங்கள்.
மனமார்ந்த வாழ்த்துகள் கவிஞர் Kathir Bharathi
சிறப்பான வடிவமைப்பு.. நேர்த்தியான நூல் வாழ்த்துகள் தோழர் Ajayan Bala Baskaran 

நாதன் பதிப்பகம்
100/-
- அம்பிகா குமரன்.