20 March, 2012

அரவான் விமர்சனம்


களவுக்குப் போகும் ஒரு சமூகத்தை காவல்காரர்களாக்குகிற பதினெட்டாம் நூற்றாண்டு வாழ்க்கைதான் அரவான். களவை விட்டுவிட்டுக் காவலுக்குப் போவதன் பின்னணியில் ஒருவன் உயிர்ப்பலி கொள்ளப் பட்டதன் ரத்தமும் கண்ணீரும் வேதனையும் நெகிழ்ச்சியும் வெக்கையும் காதலும்... நிறைகட்டி நிற்கின்றன கதையில். மகாபாரதக் காலத்து அரவான் என்கிற புராணத் தொன்மத்தில் பதினெட்டாம் நூற்றாண்டின் பாளையக் காலத்து சின்னாவைப் பொருத்திப் பார்த்து ஆரவாரமில்லாத வெற்றியை ருசித்திருக்கிறார் இயக்குனர் வசந்தபாலன். சாகித்ய அகாதெமி விருது வென்ற சு.வெங்கடேசனின் காவல்கோட்டம் நாவலிலிருந்து உருவப்பட்ட கதை என்பதால் ஏற்பட்ட எதிர்பார்ப்புக்குக் கர்வபங்கம் இல்லை. ஆனாலும், வசந்தபாலனின் முந்தைய படைப்பான அங்காடித்தெரு, வெயில்... படங்களோடு அரவானை ஒப்பிட்டுப் பார்க்கும் ரசிகன் உள்ளுக்குள் உடைந்துதான் போவான்.

கதையின் நாயகன் ஆதி, ஆளை அசத்தும் ஆஜானபாகு; புஜ பல பராக்கிரமத்திலும் ஜல்லிக்கட்டுக் காளைக்கு நிகரானத் துள்ளல். சின்னாவாக காவல்காப்பதைவிட வரிப்புலியாகக் களவுக்குப் போகும்போது அதிவசீகரம். மிருகம் படத்துக்குப் பிறகு நடிக்கக் கிடைத்த வாய்ப்பைப் பக்கென்று பற்றிக்கொண்டது புத்திசாலித்தனம். அதிலும் காளைமாடுகள் சகிதம் வந்து பசுபதியைக் காப்பாற்றும் சீனில் திரைமுழுக்க விரிகிறது ஆதித் தாண்டவம்.

கொம்பூதி பசுபதிக்கு ஆந்தை போல பகலில் உறங்கி இரவில் விழிக்கும் களவு வாழ்க்கை. கையில் வைத்திருக்கும் மூங்கில் கம்பைப் போல நடிப்பிலும் துடிப்பிலும் பதினெட்டாம் நூற்றாண்டு கரடுமுரடு. களவுக்கு முன்பும் பின்பும் என அவர் நடத்தும் பாடங்கள் படத்தின் சுவாரஸ்யப் பக்கங்கள். கதையை கொண்டு செலுத்தும் முக்கியமான பாத்திரம் தாம் என்பதை உணர்ந்து நடித்திருக்கிறார்.

குறிசொல்லும் குறத்தி அர்ச்சனா கவிக்கு அச்சச்சோ தக்குணூண்டு வேடம். குறி சொல்வதும், காதில் பூச்சுற்றுவதெல்லாம் ஓகே. அதுக்காக ஆதியிடம் காதல்வயப் படுவதில் ஒரு காட்சி நியாயம் வேண்டாமா?

முப்பது நாளில் சாகப்போகும் ஒருவனை மணக்கும் தன்ஷிகா கேரக்டரில் மட்டுமில்லை, நடிப்பிலும் அந்தோ பரிதாபம். குரலும் முகபாவமும் கட்டி இழுத்து வந்தாலும் வெட்டிக்கொண்டு போகின்றன எதிரெதிர்த் திசையில். வழக்கமான கோடம்பாக்கத்து நாயகிகள்போல நாயகனைக் கட்டிப்பிடிப்பதும் நெட்டி முறிப்பதும் தனிஷிகா மூலம் இந்தப் படத்திலும் தொடர்கிறது.

கலகலப்புக்கும் சிங்கம்புலியும், கதையின் வேகத்துக்கு பரத்தும் அஞ்சலியும் அணிலாக இருந்து உதவியிருக்கிறார்கள்.

நிலா... நிலா, உன்னைக் கொல்லப் போறேன்... பாடல்களில் காதுகளைத் தொட்ட கார்த்திக்கின் இசை, மலையளவு கனக்கும் கதையைத் தூக்கிச் சுமக்க முடியாமல் பின்னணில் நொண்டுகிறது கல்லடிப்பட்ட குதிரைப் போல. கதைக்கு நியாயமாக உழைத்திருக்கும் கலை இயக்குனர் விஜய் முருகனின் கரங்களுக்கு பாராட்டுக் குலுக்கல்கள் பலபல. பதுங்கும் சிங்கத்தின் பவ்யம்; எதிர்தடிக்கும் சிறுத்தையின் வேகம்; நிலவின் குழுமை; நிலத்தின் தன்மை... என பதினெட்டாம் நூற்றாண்டைக் காட்டுகிறது சித்தார்த்தின் காமிரா.

இப்போது இயக்குனர் வசந்தபாலனிடம் வருவோம்?

களவுக்குப் போய்விட்டு வரும் பசுபதி குழந்தைகளைத் தூக்கிக் கொஞ்சும்போது செல்லங்களா என்கிறாரே செல்லம் என்பது பதினெட்டாம் நூற்றாண்டு வார்த்தையா? காவல் சமூகத்திலிருந்து வந்த ஆதி, அவ்வளவு நகைகளைத் திருடி மரத்தின் அடியில் எதற்காக ஒளித்துவைத்திருக்கிறார்? கொலை செய்த பாளையக்காரர் அறையில் ஆதியும் அவரும் மோதிக்கொள்ளும்போது பாளையக்காரர் சிம்னிவிளைக்கைத் தூண்டிவிடுகிறாரே மண்ணெண்ணெய் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கண்டடைந்த திரவம் அல்லவா? ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்று சொன்னவனாயிற்றே தமிழன். ஏன் பசுபதி உள்ளிட்ட அத்தனை பேரும் பல்கறையோடு சிரிக்கிறார்கள்? ஆதிக்குப் பதிலாக ஏற்கெனே ஒருவர் பலிகொள்ளப்பட்டப் பிறகும் ஆதி பலிவாங்கப்படுவது படத்தின் டைட்டிலுக்காக இழுத்துவைத்து அடிக்கப்பட்ட ஆணி என்பதை ஒருவர்கூடவா சொல்லவில்லை? கொல்வதென்றால் சட்டென்று வெட்டிக் கொன்றுவிடாமல் இயேசுநாதர் ஸ்டைலில் சிலுவைச் சுமக்க வைத்து ஆதியைக் கொள்வது கதையோடு ஒட்டவில்லையே கவனித்தீர்களா...? இப்படி கேள்விகள் முட்டி எழுந்தாலும் ரத்தமும் சதையுமாய் காலத்தால் நமக்கு முன்னால் வாழ்ந்த வாழ்வை திரையில் தந்ததற்காக உங்களுக்கும், அர்த்தம் புரிந்து தயாரித்த அம்மா கிரியேஷன்ஸ் சிவாவுக்கும் அடர்த்தியான பாராட்டுகள்.

அரவான் - விதையாய் விழுந்தவன்

நன்றி கல்கி 18.03.2012

1 comment:

கி.ச.திலீபன் said...

arumaiyaana vimarsanam unmaiyilum vasanthabaalanin padamaa ithu entruthaan ketkath thontrukirathu athanai nange suttikkaattiyirukkireer sirappu!
ki.sa.dhileepan