22 June, 2013

மொழியை நிரடிக் கவிதை செய்பவன்! - ஆத்மார்த்தி (புன்னகை (ஜூன் 2013)கவிதை இதழில் மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் கவிதைத் தொகுப்புக்கு ஆத்மார்த்தி எழுதிய விமர்சனம்)

யவ்வனம் என்ற சொல் எத்துணை அழகானது? அழகு என்னும் பதத்தினுள் உடலின் வனப்பைக் கலந்து பெறுகிற அதே உணர்தலைக் காட்சி இன்பமாகக் கிளர்த்துகிற சொல் அது. யவ்வனம் என்னும் சொல் தொடங்கி கதிர்பாரதியின் முதல் கவிதைத் தொகுப்பான மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் காத்திரமான கவிதைகளை முன் வைக்கிறது. கதிர்பாரதியின் கவிதை உலகம் நம்பகமானது. விசாரணைக்கு உட்படுத்துகிறவர்களை இதழோரப் புன்னகையுடன் உள்ளே அனுமதித்துவிடுகிற கவிதைகள் அவை. ஒருபோதும் கதவடைப்புகள் செய்வதேயில்லை.
தனி மனிதனின் அகம் தானாகவும் தானற்றும் மற்றமைகளின் உள்ளேயும் வெளியேயுமாகத் தன்னைச் சிதைத்துப் பார்ப்பதென்பது மொழியின் சாலவித்தையாகப் பலராலும் கையிலெடுக்கப் படுவதுதான். வெகுசிலருக்கு மட்டும் அது தன்னியல்பாக நேர்ந்துவிடுகிறது. கதிர்பாரதியின் கவிதாவுலகம் அத்தகையது. நுட்பம் என்ற சொல்லாடல் மேலோட்டமானது. மனதின் அலைதல்களும் மௌனித்தலும் கலந்து சிதைகிற தனித்த குரலிலான முன்வைப்புக்கள் கதிர்பாரதியின் கவிதைகள்.
           நிலம் அடிக்கடிச் சிதைவுறுகிறது. ஒற்றுமைகளும் வேறுபாடுகளும்
கலந்து தனிக்கையில் நிலம் நிகழ்த்துகளனாக மாறுகிறது.பெரிய அதிர்வை ஏற்படுத்துகிற எல்லா நிகழ்வுகளும் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிலத்தினைப் பிளக்கின்றன. மொழி அனாதி நகர்தலில் காலகாலத்தை மையமாகக் கொள்கிறது. வாகனங்கள் விரையும் நால்வழிச்சாலையில் மெல்லத் தன்னைத்தானே மெச்சிக்கொண்டு சோம்பி நகரும் எருமை போல மொழி காலத்தின் மீது மெல்லத் தன் நகர்தலை நிகழ்த்துகிறது.
       உலகமயமாக்கலுக்கு முன்னும் பின்னுமாக இரண்டாகப் பிளந்து
கலைந்து கிடக்கிற நிலம் மற்றும் அதே நிகழ்தலுக்கு முன்னும் பின்னும் வெவ்வேறாக வாய்க்கிற மத்யமவாசி ஒருவனின் அகமனம் ஆகியன தொண்ணூறுகளின் மத்தியிலேயே தமிழ்க்கவிதைச் சூழலினுள் தன் தடத்தைப்பதிக்கத் தொடங்கிவிட்டது. எனினும் இரண்டாயிரமாவது ஆண்டின் முதல் சில வருடங்கள் கழிந்த பின் அதே தடம் நின்று நிலைபெற்றுக் கவிதைக்குள் தன்னை அழுத்தமாக பதிந்துவைக்கத் தொடங்குகிறது. இரண்டாயிரங்களுக்குப் பின்னால் எழுத வந்த கவிஞர்களில் கதிர்பாரதி கவனிக்கத் தகுந்தவராகிறார். அவரது கவிதைகள் பேசவேண்டிய பொருளைப் பேசவிழைகின்றன. அதில் பெருமளவு வெற்றியும் பெற்றிருக்கின்றன."கனவிலிருந்து எழுந்து போய் சிறுநீர் கழித்தேன்" என்னும் கவிதை சமகாலத்தில் எழுதப்பெற்ற முக்கியக் கவிதைகளில் ஒன்றாகத் தன்னை முன்வைக்கிறது. சரித்திரப் பாத்திரங்களின் காமச் செயல்பாடுகளால் வரிசைகட்டிக் கோர்க்கப்பட்ட இக்கவிதையின் ஈற்றுவரி நமக்குள் பெயர்க்கிற அனுபவம் சிறப்பானது. கதிர்பாரதி தனக்கென்று ஒரே பாணியையோ அல்லது ஒரு வசதிக்கான முயல்வையோ ஏற்படுத்திக்கொள்ளாமல் அந்தந்தக் கவிதையை அவ்வவற்றின் போக்கில் அணுகியிருப்பது இத் தொகுப்பை மிகவும் உயிர்ப்புள்ளதாக்குகிறது.கனவை விவரிக்கிற உரையாடல் மொழியைக் கையிலெடுக்கிற கதிர்பாரதி ஒரே தொனியில் பேசிக்கொண்டே சட்டென்று அதிஅபூர்வங்களைப் போகிறபோக்கில் சொற்களால் கடந்து விடுகிறார். திட்டமிட்டு தன் கவிதைகளை ஏற்படுத்துகிற சமகால முயல்வுகளுக்கு மத்தியில் மிக அமைதியாகத் தானும் தன் கவிதைகளுமாக கவனம் ஈர்க்கும்முகாந்திரமின்றி வெளிப்படுகிறார். அது நம்மை இக்கவிதைகளுக்குள் லேசாய்
சென்று திரும்ப அனுமதிப்பதே இல்லை. மாற்றாக அவற்றுக்குள் வாசகமனம்
ஆழப் பொருந்துகிறது. ஒப்புக்கொடுக்கிறது. இவை எந்தக் கட்டளையும்
நிர்ப்பந்தமும் இன்றி நிகழ்வது சிறப்பு.
          "இறந்த காலத்தில் தாழ்ந்து எதிர்காலத்தில் உயர்ந்து
நிகழ்காலத்தில் மிதப்பதைப் பகடி செய்வதாக" இவ்வரிகள் "காலாதிபதி"
என்னும் கவிதையில் வருபவை.
"ஆசீர்வாதங்களையும் வாக்குத்தத்தங்களையும் முற்றாக நிராகரித்துவிட்ட
எனது தனிமை மீது படர்ந்திருக்கும் சாபத்தால் ஒரு பயனுமில்லை"என
அறிவிக்கிறார் "லாபங்களின் ஊடுருவல்" என்னும் கவிதையில்
."கன்ஃப்ரம்" என்னும் கவிதை நெஞ்சடைத்து இறந்தவனின் முகப்புத்தகப் பக்கத்தில் அவன் இறப்பை அறியாது இன்னமும் வந்துகொண்டிருக்கும் நட்புக் கோரிக்கைகளை நம்
முன் படர்த்துகிறது. ஒரு வருடத்துக்கு முன்னால் நிகழ்ந்த வாகனவிபத்தை ஒரு குழந்தையின் பிறப்போடு ஒப்பிட்டு மெலிதான வலியுடன் கூடிய புன்னகையை வரவழைக்கிற "வலிக்கிறது தோழர்களே" ஒரு சிறந்த கவிதை.
      இத் தொகுதியில் இன்னும் ஒரு ஆகச்சிறந்த கவிதை "யானையோடு நேசம் கொள்ளும் முறை". என்ற ஒன்று.   ஒரு யானையை எப்படியெலாம் அணுகி எதையெல்லாம் தவிர்த்து எந்தெந்த வழிகளிலெல்லாம் அதை சினேகிப்பது என்ற நேரடித் தன்மையில் விரிகிறாற் போலத் தோற்றம் அளித்தாலும் கூட இக்கவிதை மிகுந்த சைகைகளையும் குறிமொழியினையும் தன்னகத்தே கொண்டு விரிவாக்கமடைகிறது. அரசியல் கவிதைகளில் நேரடிக்கவிதைகளை விடவும் இத்தகைய முயல்வுகள் ஆணித்தரமாக வாசகமனதுள் வினைபுரிவது வழக்கம். இக்கவிதையிலும் சொல்லப்படுகிற யானை என்பது அதிகாரமையமாகிறது. ஆட்சியாளனாகிறது. மேலதிகாரியாகிறது. பலம்கொண்டவனாகிறது. மேட்டிமைக்காரனாகிறது. கொடுங்கோலனாகிறது. தலைவனாகிறது. குவிமையத்தின் வக்ரமனம் என்பது பெரும்பான்மையின் மீது மெலிந்தோர் மீது காலங்காலமாகக் கருணையின்றித் தத்தமது குரூரத்தைப் பாய்ச்சிவருகையில் இக்கவிதை மெல்ல முன்வைக்கிற சூத்திரம், மெல்லினம் தன்னைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் மேலும் ஒரு மையத்தை ஒரு அதிகாரத்தை வேறுவழியின்றி எதிர்கொள்வதற்கான வழிமுறைச்சூத்திரமாகத் தன்னை முன்வைக்கிறது. இக்கவிதை வாசகமனத்தை நிறுத்தி வைக்கிற நீட்சி என்பது மிக முக்கியமான ஒன்று.
    மேலும் தொகுப்பின் தலைப்புக் கவிதையான "மெசியாவுக்கு மூன்று
மச்சங்கள்" என்னும் கவிதையில் பாத்திரமாக்கப்படும் விண்ணகத் தந்தையின்
ஒவ்வொரு மச்சத்தையும் கோருவதற்கு அதன் பின்னே ஒரு காதலி இருப்பதாகச் சுட்டுவது நல்ல நையாண்டி. என்றபோதும் அதே மெசியாவின் நான்காவது மச்சம்
மெல்ல உருவாகையில் அவரது நாலாவது காதலி நீங்களாகவும் இருக்கக் கூடும்

என்று முடிகையில் பகடியைத் தாண்டி சின்னதொரு அதிர்வு நேர்கிறது
          சமகாலத்தில் இத்தனை உவமைகளுடன் விரிகிற இன்னொரு
தொகுப்பைக் கூறுவது கடினம் கதிர்பாரதி உவமைப் படுத்துவதில் தன் வேலையைத் தொடங்குகிறார். அது அவரது வெற்றிகரமாகிறது,சொல் பேச்சுக்கேட்டு நடக்கும்
குழந்தைகளைப் போல் சவுக்கியமானதாகிறது. வாசிக்கிறவனை மெலிதான
கிறக்கத்தினூடேயே தான் விரும்புகிற நீட்சியின் எல்லை வரைக்கும் நடத்திக் கொண்டு செல்கிற இக்கவிதைகள் ஒருபோதும் ஆயாசத்தை காட்டிவிடவில்லை என்பது ஆறுதலல்ல. ஆச்சர்யம்.
              ஊருக்கு வெளியே கனத்து நிற்கிற சுமைதாங்கி மீது வளரும் துயரமாக செழித்துப் படர்கிற பிரிவின் பசலைக்கொடிக்கு உயிரைப்பந்தலாக்குவது சாலப்பொருந்தும். இது ஓர் உதாரணம். ”சமாதானத் தூதுவர் = ஹிட்லர்’’, ”இரயிலைக் கொன்றவன்”,’’ஆனந்தியின் பொருட்டுத் தாழப்பறக்கும் தட்டான்கள்”, ”மலை நடுக்கம்”... ஆகிய கவிதைகளும் தனித்த அனுபவங்களை நிகழ்த்திப் பார்ப்பவை.
               கதிர்பாரதியின் கவிதை உலகம் உரையாடலுக்கு அடுத்த நிலை
மொழியைத் தன்னிணக்கமாகக் கொள்கிறது. அவர் ப்ரியமான வார்த்தைகளை கலைத்துப் போட்டு அதன் வெவ்வேறு முனைகளை ஆய்ந்துபார்க்கிறார். விவிலிய பலத்துடன் தொன்மக் குறிப்புகளைத் தன் கவிதைகளினூடே அவிழ்த்துக் கொண்டே செல்வது அவரது பாணியாகிறது. மேலெழுந்த வாரிக் கவிதைகளல்ல.
கதிர்பாரதி தன் மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் தொகுப்பில் தந்திருப்பதும்
தொட்டிருப்பதும் அகமனம் தனக்கு வாய்த்திருக்கிற மொழியை நிரடிக் கவிதைகளை விரித்துக் கொட்டுகிற தனித்த முயல்வுகள்.

20 June, 2013

கலைஞர் தூது போன காதல் ---- மதன் கார்க்கி நந்தினி



நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு... இந்தப் பஞ்சபூதங்களில் எதுதான் காதல்? இவையெல்லாம் கலந்ததுதான் காதல் எனில் அண்ணா பல்கலைகழகத்தில் என்னையும் நந்தினியை ஒரு மணி நேரத்துக்கு மேலாக நனைத்த மழையை ஏன் காதலென்று சொல்லக்கூடாது! எங்களை ஒன்றாக நனைத்த மழையே உன் ஈரத்துக்கு நன்றி. இப்போது பெய்கிற மழையில் அப்போது பெய்த மழையை இனங்காண முடிகிற உணர்வுதானே காதல்.
அண்ணா பல்கலைகழகத்தில் ஐந்தாண்டுகள் படிப்பை முடித்துவிட்டு ஆராய்ச்சிப் படிப்புக்காக நான் ஆஸ்திரேலியாவுக்குப் பறக்கிறவரை என் காதலை நந்தினியிடம் சொல்லவில்லை. அப்போது என் காதலுக்கு வயது ஐந்து. என்.சி.சி.யில் நான் சினியர் மாணவன்; நந்தினி ஜூனியர். இந்தளவில் நிகழ்ந்த எங்கள் அறிமுகத்தை காதலை நோக்கித் திருப்பி வைத்ததெல்லாம் அண்ணா பலகலைகழகத்தில் நான் செக்ரெட்ரியாக இருந்த கம்யூட்டர் சொஸைட்டிதான். அந்தச் சொஸைட்டி, மாணவர்களின் கம்யூட்டர் திறன் மட்டுமல்லாது மற்றத் திறமைகளுக்குமான நாற்றங்கால். அங்கே நந்தினி என் அப்பாவின் கவிதைகளையும் கலீல்ஜிப்ரானின் படைப்புகளையும் பற்றிப் பேசியதும் எழுதியதும் அவளைத் தனித்துக் காட்டியது. அப்போதிருந்தே நான் நந்தினியைக் கவனிக்க ஆரம்பித்திருந்தேன். ஆனால் நந்தினிக்குள் நான் காதாலாக அப்போது இல்லை. எனக்கு அவளுக்கும் இடையில் இருந்தது நட்புதான் என்பது அவளது எண்ணம். அப்போதெல்லாம் நந்தினியோடு என்ன பேச வேண்டும் என்பதை ஒரு பேப்பரில் குறிப்பெடுத்துக் கொள்வேன். பிறகுதான் பேசுவேன். குறிப்புகளுக்கு இடையில் இந்த இடத்தில் நந்தினி சிரித்தால், இந்தப் பதில் சிரிக்காவிட்டால் இந்தப் பதில் என்றெல்லாம் காதலை வீட்டுப்பாடமாகச் செய்தவன் நானாகத்தான் இருக்கும். சிரிக்க வேண்டும் என்று நினைத்த இடத்திலெல்லாம் நந்தினி சிரித்தாள். இந்த அனுப்பவத்தைத்தான் காதலில் சொதப்புவது எப்படி படத்தின் அழைப்பாயா பாடலில் இப்படிப் பதிந்து வைத்தேன்.
நான் என்ன பேச வேண்டும் என்று சொல்லிப் பார்த்தேன்
நீ என்ன கூற வேண்டும் என்றும் சொல்லிப் பார்த்தேன்
நான் அத்தனைக்கும் ஒத்திகைகள் ஓடவிட்டுப் பார்த்தேன்
நீ எங்கு புன்னகைக்க வேண்டும் என்று கூட சேர்த்தேன்

ஆஸ்திரேலியாவில் இருந்த ஒருநாளில் நந்தினிக்கு நான் சாட்டில்தான் என் காதலைச் சொன்னேன். ’’நான் மத்தியத்தர வகுப்பு. உங்களோடது பெரிய குடுபம் ஒத்துவராது என்று முதலில் மறுத்தவளுக்கு முற்றாக மறுக்க மனமில்லை. ஆஸ்திரேலியாவில் என் படிப்பு எனக்குக் கொடுத்த அழுத்தம், லட்சியம் எல்லாம் என்னை நந்தினியிடமிருந்து விலக வைத்தது. நந்தினிக்கும் அப்படித்தான். அவள் மேல்படிப்பை முடித்துவிட்டு அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டாள். பிறகு ஐந்து வருடங்கள் என் படிப்பு, பாடங்கள், லட்சியங்கள், தேடல்கள் என்று ஓடிக்கொண்டிருந்தேன். நந்தினியும் அப்படித்தான் அமெரிக்காவில் ஓடிகொண்டிருந்திருக்கிறாள்.
 என் ஆராய்ச்சிப் படிப்பெல்லாம் நான் முடித்துவிட்டு இந்தியா வருகிற சமயத்தில் என் அப்பா என்னைப் பற்றி குமுதத்தில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். என் தோள்வரைக்கும் வளர்ந்துவிட்ட என் மகனை, தோளைவிட்டுக் கீழிறக்கிவிடும் காலம் வந்துவிட்டது. இனி அவன் திசை; அவன் வானம்; அவன் சிறகு... திருமணம் செய்து வைக்கலாம் என்றிருக்கிறேன் பார்க்கலாம் எந்தத் தேவைதைக்குக் கொடுத்து வைத்திருக்கிறதோ என்றெல்லாம் அந்தக் கட்டுரையில் எழுதிருந்தார். அப்போதுகூட என் மனசில் நந்தினியின் ஞாபக நிழல் இல்லை. திருமணத்துக்குத் தீவிரமாக பெண் தேடும் மும்முரத்தில் ஒரு நாள் என் அப்பா கேட்டார்.
‘’உன் மைண்ட்ல யாரும் இருக்காங்களா? சொல்லுப்பா”
‘’அப்படியெல்லாம் ஒருத்தருமில்லை. நீங்க பொண்ணு பாருங்க’’ என்று சொல்லிவிட்டேன். பின்பு எதேச்சையாக ஆர்குட்டில் நந்தியைப் பிடித்தேன்.
எப்படி இருக்கீங்க’’ -நான்தான் மீண்டும் ஆரம்பித்தேன்.
‘’நான் நல்லாருக்கேன். அமெரிக்காவில் வேலையில் இருக்கேன்.” – என்றாள் நந்தினி.
கல்யாணம் ஆகிடுச்சா’’
‘’கல்யாணம் பண்ணிக்கறதா ஐடியா இல்லை. நிறைய பயணம் போகணும். உலகத்தை அப்சர்வ் பண்ணனும். விரிந்து பரந்த உலகத்தில் விடை தெரிய விஷயங்கள் நிறைய இருக்கே!’’ என்றெல்லாம் பேசிக்கொண்டு போன நந்தினியிடம்,
’’நான் இண்டியா வந்துட்டேன் வீட்டுல பொண்ணு பாத்துட்டு இருக்காங்க. உங்களைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப் படறேன். நீங்க என்ன சொல்றீங்க’’ – சாட்டில் தட்டிவிட்டுவிட்டு, நந்தினியின் பதிலுக்காகக் காத்திருந்த நொடிகள் மிகக் கனமானவை. சிறிது நேர மௌனத்துக்குப் பிறகு,
‘’எனக்கு சரி. நீங்களும் நானும்சேர்ந்து வாழற வாழக்கை அர்த்தமுள்ளதா இருக்கும்னு மனசு சொல்லுது. நான் இன்னும் ஒரே வாரத்துல உங்களைப் பாக்கறேன்’’ என்று நந்தினி சொன்னதும் எனக்குள் நந்தினிக்காக ஆகாயம் விரிய ஆரம்பித்தது. ஆகாயம் பழசுதான் ஆனால் சிறகு புதிதல்லவா. நந்தினி என்னை வந்து பார்ப்பதாகச் சொன்ன நாள் என் பிறந்தநாள் மார்ச் 110010 அன்று.

மீண்டும் அப்பாவிடம் வந்து நின்றேன். நந்தினியைப் பற்றி சொன்னதும் அவருக்குப் பயங்கர கோபம். என் காதலை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கிடையில் அம்மாவை நந்தினியோடு பேச வைத்து அவரது சம்மதத்தைப் பெற்றிருந்தது மட்டும் எனக்குப் பலமாக இருந்தது. தன் கனிவான பேச்சால் என் அம்மாவின் இதயத்தை வென்றிருந்தாள் நந்தினி.
’’ஏன் ஆரம்பத்தில் சொல்லவில்லை. நான் நண்பர்களிடம் சொல்லி உனக்காகப் பெண்ணெல்லாம் பார்த்துவிட்டேனே முடிவெடுக்க வேண்டிய நேரத்தில் ஏன் இப்படி?’’ என்ற அப்பாவின்  வாதத்தில் தந்தைக்குரிய கவலையும் மகனின் வாழக்கை நலமாக இருக்க வேண்டுமே என்ற எண்ணமுமே இருந்தன.
‘’அப்பா, என் விருப்பம் நந்தினிதான். உங்கள் சம்மதுக்காகக் காத்திருக்கிறோம் இருவரும்’’ என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். தம்பியைத் தூதனுப்பினேன். தாயை அனுப்பினேன். நண்பனையெல்லாம் பேசவைத்தேன். என் அப்பா கவிதைகளில் பாடல்களில் மட்டுமல்ல, கோவத்திலும் பிடிவாதத்திலும் பேரரசு. எனக்கு வேறு வழித் தெரியவில்லை. என் காதலைத் தூக்கிக்கொண்டு கலைஞரிடம் போய்விட்டேன்.
தயாளு அம்மாள் அவர்களிடம் விசயத்தைச் சொல்லிவிட்டு கலைஞரைச் சந்தித்தேன். என் காதல் பற்றி அவரிடம் சொன்னபோது அவர் தமிழகத்தின் முதல்வர். முதலில் காது கொடுத்துக் கேட்டவர், கவலைப்படதே என் குடும்பத்தில் அனைவரும் காதலித்து கல்யாணம் செய்துகொண்டவர்கள். நான் உன் அப்பாவிடம் பக்குவமாகப் பேசுகிறேன் என்று பிறகு  கைகொடுத்தார்.
மறுநாள் காலையில் அப்பா எப்போதும்போல கலைஞருக்கு ஃபோன் போட நான் என் காதலுக்காக கலைஞரைப் பார்த்துவிட்டு வந்த விஷயத்தை என் அப்பாவின் காதுக்குப் போட்டுவிட்டார். கலைஞரோடு அப்பா பேசி முடித்ததும், என் வீட்டில் கோவ அலை வீச ஆரம்பித்தது.
‘’கலைஞர் வரைக்கும் உன்னைப் போக வைத்தது யார்? எப்படிப் போகலாம் என்றெல்லாம்...” தந்தைக்குரிய பொறுப்போடும் அவருக்கே உரிய கோவத்தோடும் பொரிந்து தள்ளிவிட்டு,
சரி நந்தினியை வரச் சொல். பேசிப்ப் பார்க்கிறேன்’’ என்றதும், எனக்கு சந்தோஷம்.
நந்தினியை வரவைத்து அப்பாவோடு அரைமணிநேரம் பேச வைத்தேன்.
காதலைப் பற்றிப் பேசவந்தவள், அப்பாவின் கள்ளிக்காட்டு இதிகாசம் நாவலையும் ரிதம் படத்தின் பஞசப்பூதப் பாடல்களைப் பற்றியும் பேசிய தைரியசாலி நந்தினி. அப்போதுகூட அப்பா இறங்கி வரவில்லை.
‘’எங்கேயும் வெளியே சுற்றாதீர்கள்’’ என்று கட்டளைப் போட்டுவிட்டு கவிதை எழுதப் போய்விட்டார். அவர் சொன்னதிலும் நியாயம் இருக்கத்தான் செய்தது. அமெரிக்காவிலிருந்து என்னைப் பார்க்க நந்தினி இந்தியா வருவதற்குள் அந்த மாத ஃபோன் பில் மட்டும் எழுபத்தைந்தாயிரம் கட்டினேன். அப்போது எனக்கு அண்ணா பலகலைகழகத்தில் பார்ட் டைம் வேலையில் மாதச் சம்பளமே இருபதாயிரம்தான்.
ஒரு வாரத்துக்கே இந்த நிலைமை என்றால் வருடக் கணக்காக இருந்திருந்தால் என் அப்பா சம்பாதித்தெல்லாம் ஃபோனுக்கே போயிருக்கும்.

நந்தினியோடுதான் என் திருமணம் என்றதும் அதன் நியாயத்தை அப்பா புரிந்துகொண்டார்.  கலைஞர் நடத்தி வைத்த என் திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள் ஓடிவிட்டது. எங்கள் காதலின் உயிர்ச்சாட்சியாக மகன் ஹைக்கூ வந்துவிட்டான். என் பாடல்களும் கவிதைகளும் நந்தினிமீது கொண்ட காதலில் பதிவுகள்தான். ஒரு பிரசனையை ஒரு நாள் ஆறப் போட்டுப் பேசுவது என் பழக்கம் ஆனால் நந்தினி அப்போதே அதனை விவாத்தித்து தீர்வு கண்டுவிட்டு வெளியே வந்துவிட வேண்டுமென்று நினைப்பாள். நாளாக நாளாக அது சரிதான் என்று புரிய வைத்தது. 

பயணமும் உணவும்தான் எங்களுக்கான புரிதலை காதலை இன்னும் அதிகப் படுத்தி இருக்கிறது. டாஸ்மேனியாவில் நானும் நந்தினியும் காரில் சுற்றிய 3000 கி.மீ. பயணம்தான் அவளை அவளது ரசனைகளை ஏக்கங்களை இன்னும் நெருக்கமாக உணர வைத்தது.  உலக இசைகள் விவாதம், நாவல்கள், எங்களுக்குள் வரும் சண்டைகள் எல்லாம் எங்கள் காதலன்றி வேறில்லை. என் பாடல்களை ஆங்கிலத்தில் நந்தினி மொழிபெயர்க்கும்போது வந்து விழும் வார்த்தைகளில் இன்னும் எங்கள் காதல் அடர்த்தியாகிக் கொண்டிருக்கிறது.
மொழியை நம்பி ஓடிக்கொண்டு இருப்பவனுக்குக் காதல் நல்ல ஆசுவாசம்தான். அதுவும் திரைத்துறையில் ஓடிக்கொண்டிருக்கிற எனக்கும் என் லட்சியத்தியத்தும் ஆசுவாசமாக காதல் இருக்க வேண்டிய இடத்தில் நந்தினியை நிற்கவைத்திருக்கிறது காலம். 
கடல் படத்தில் நான் எழுதிய கீழ்கண்ட பாடலைப் போல.

மனச தொறந்தாயே... நீ
எங்கிருந்து வந்தாயோ நீ?அடியே... அடியே
என்ன எங்க நீ கூட்டிப் போற?


கல்கி யில் பிரசுரமான பிரபலங்களின் காதல் 4

கதிர்பாரதி


19 June, 2013

ஐ லவ் யூ அபிஷேக். வயலின் கலைஞர் பத்மா ஷங்கர்

காற்றில் அலைகிற இசைத்துணுக்கு ஒன்றுதான் காதலாக மாறுகிறதா? இல்லை காதல்தான் காற்றில் இசைத் துணுக்காகி மிதக்கிறதா... இரண்டும் இதயம் தொடும்போது ஒன்றுபோல் ஆகிறதே...? எனில் இரண்டும் ஒன்றுதானே? வாசித்து முடிக்கிற கணத்தில் அதிர்கிற வயலின் கம்பிகளைப் போல இந்தக் கேள்விகள் காதலில் அதிர்ந்து கொண்டிருக்கின்றன அபிஷேக். இப்போதும் மும்பையின் செம்பூர் வீதியில் உங்கள் கைபிடித்து நடக்கத் தோன்றுகிறதே அந்தக் காதல்தானே நீங்களும் நானும்.
மும்பையாகிவிட்ட பழைய பம்பாயின் செம்பூர் ஏரியாதான் நானும் அபிஷேக்கும் பிறந்த வளர்ந்த பூமி. நான் ஒரு பக்கம் அபிஷேக் ஒரு பக்கம் செம்பூரில் சுற்றித் திரிந்ததெல்லாம், அந்த தியாராஜர் உற்சவத்துக்கு முன்புதான். அப்போது அந்த உற்சவத்தை முன்னின்று நடத்தியதில் ஒருவர் அபிஷேக். அதில் வயலின் வாசிக்கப் போனபோதுதான் நான் முதன்முதலாக அபிஷேக்கைப் பார்த்தேன். நட்டுமுடித்த அடுத்த நொடிக்குள் ஒரு மரக்கன்று சடசடவென வளர்ந்து விருட்சமாகும் என்றால் நம்புவீர்களா? ஆனால் எங்கள் காதலில் அதுதான் நடந்தது. அதுவும் தன் சல்லிவேர் முதல் ஆணிவேர் வரை விட்டு வளர்ந்து விருட்சமாகிவிட்டது. பார்த்தவுடன் காதல். எனக்குள் இருந்து ஒரு குரல், ’அபிஷேக்தான் உன் வாழ்க்கைத் துணை’’ என்று ஒலித்ததை இப்போதும் என்னால் கேட்க முடிகிறதே.
மும்பையில் பீச், ரெஸ்டாரெண்ட், பார்க்... இவையெதுவுமில்லை நாங்கள் இருவரும் முதன்முதலில் தனியாகச் சந்தித்தது மும்பை சித்தி விநாயகர் கோயிலில்தான். சாமி கும்பிட்டுவிட்டு அர்ச்சனைப் பூக்களை என் கைகளில் திணித்தப்படியேதான் அபிஷேக் தன் காதலைச் சொன்னார். என்னைச் சுற்றி வயலினின் ரீங்காரம். இருந்தாலும் பெண்ணுக்கேயுரிய நாணமும் யூகோவும், ”எனக்கு ஒரு வாரம் டைம் கொடுங்க சொல்றேன்’’ என்று சொல்ல வைத்தது. ஒரு வாரம் கழித்து மஹாலட்சுமி கோயில் நான் அப்போதான் காதல் வயப்பட்டதுபோல ஒகே சொன்னேன். ஆனால், அபிஷேக் தன் காதலைச் சொன்ன கணத்திலேயே கிஷோர் குமாரும், முகமது ரஃபியும் எனக்குள் தங்களின் காதலை இசைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
அப்போது செல்போன் இல்லாத காலம். ஆனாலும் பேசிக்கொள்ளாமல் இருக்க முடியாதே. எங்கள் இருவர் வீட்டு லேண்ட்லைன் ஃபோனும் ட்ரிங் ட்ரிங் என்று ரெண்டு ரிங் விட்டு பிறகு மறுபடியும் அலறினால் லைனின் இரண்டு முனைகளிலும் நாங்கள்தான் இருப்போம். ஒருமுறை பேசிக்கொண்டிருக்கும்போது அப்பா
வந்துவிட்டார். அப்போது அபிஷேக்கை அபிநயா என்று பெண்ணாக்கிவிட்டத்தை நினைத்து இருவரும் சிரித்துக்கொள்கிறோம். எங்கள் காதல் தன்னிரு கைகளை எடுத்து தானே குலுக்கிக்கொள்ளும் இதுபோன்ற சந்தோஷத் தருணங்களைத் தந்துகொண்டுதான் இருக்கிறது.
காதலைச் சொல்லிக்கொண்டப் பிறகு, முன்பு போல செம்பூர் வீதிகளில் எங்களால் துள்ளிக்குதித்துக் கொண்டு போக முடியவில்லை. யாராவது பார்த்துவிடுவார்களோ என்று இடைவெளிவிட்டும் சிறிது நேரத்தில் யாரும் பார்க்கவில்லை என்று எங்களை ஏமாற்றிக்கொண்டு நெருங்கி நடப்போம். அதுபோன்ற சமயத்தில் அபிஷேக் முணுமுணுத்த ராஜா சாரின், ”நீயொரு காதல் சங்கீதமும்”, ”சுந்தரி கண்ணால் ஒரு சேதியும்” எனக்குள் காதலை ஆழ விதைத்த தருணங்கள். அதன்பிறகு இன்றளவும் இளையராஜாவின் மெடிலடிகளில் எங்கள் காதலைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறோம்.
அபிஷேக்குக்கு என்னை கல்யாணம் செய்துகொடுக்கும்படி என் பெற்றோரை நிர்பந்தித்தது அவரது அம்மா மீது அபிஷேக் காட்டிய அன்புதான். அதில் நெகிந்து போய்தான் என்னை கல்யாணம் செய்துகொடுத்தனர். திருமணத்துக்குப் பிறகு அதே காதலோடும் இன்னும் அதிக வேகத்தோடும் காலத்தை எதிர்கொள்கிறோம். மோகமுள் படத்தில் பாபுவாக அபிஷேக் நடித்து படம் பெரும்தோல்வியைத் தருணத்தில்தான் நான் அபிஷேக்கைத் திருமணம் செய்துகொண்டேன். அதன்பிறகு அஜித் நடித்த காதல்கோட்டை படத்தில் முதலில் அபிஷேக்தான் நடித்தார். அப்போது அவரது அப்பாவின் மரணம்தான் அந்த வாய்ப்பை கைநழுவிப் போகச் செய்தது. வினித் நடித்து பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட் ஆன மேமாதம் படத்தில் முதலில் புக் ஆகி சூட்டிங் போனது அபிஷேக்தான். அப்புறம் வினித் நடித்தார். இதுபோன்ற எங்கள் வாழ்க்கையில் சாண் ஏறி முழம் சருக்கிய தருணங்கள் ஏராளம். ஒரு போதும் காதல் சருக்கியதில்லை. பத்தாயிரம் ரூபாயிலும் குடும்பம் நடத்தியதும் உண்டு. பின்பொரு காலத்தில் வைத்திய செலவுக்காக இருந்த பத்தாயிரத்தை கொடுத்துவிட்டு வந்ததும் உண்டு.
அபிஷேக் எவ்வளவு சோர்வாக இருந்தாலும், ”கண்ணே என் கண்மணியே கண்ணான கண்ணனே... மண்ணுலகில் என் வாழ்வு வளம்பெற வந்துதித்தாய் கண்ணனே... என்று நான் தாலாட்டுப் பாட ஆரம்பித்துவிட்டால் குழந்தையாகிவிடுவார் என் மடியில். அபிஷேக்குக்காக மட்டுமே நான் வாசிக்கும் வயலினில் பேஷ் ராகம் பெருக்கெடும், லால்குடியின் தில்லாடி பிரவகிக்கும். வாசித்து முடிக்கிற கணத்தில் அறையெங்கும் எங்களுக்கான காதல் நிறைந்திருக்கும். எங்கள் ஊடலைப் பெறும்பாலும் முடித்துவைப்பது எனக்குப் பிடித்த பேல்பூரி பானிப்பூரியும் அபிஷேக்குக்குப் பிடித்த அவியல் அடை தோசையும்தான். இதுவரை நாங்கள் வீட்டில் சண்டை போட்டதே கிடையாது எல்லாம் காரில்தான். ரெண்டு பேரும் சண்டை போட வேண்டுமென்றால் காரை எடுத்துக்கொண்டு ஈஸிஆர் பக்கம் போய்விடுவோம். மனம் சரியாகும் வரை சண்டை போட்டுவிட்டு, பிறகு காரோடு சேர்த்து சணடையையும் வெளியே நிறுத்துவிட்டு வீடு வந்த தருணங்களில் காதலின் புன்னைகை அவ்வளவு பிரகாசமாக இருக்கும்.
இன்று நான் வயலின் கலைஞராக ஒரு நூறு பேருக்காவது தெரிகிறேன் என்றால் அது அபிஷேக்கால் என்பதுதான் உண்மை. அதேபோல, ”உன் டெடிகேஷன்ல பத்து பர்செண்ட் இருந்தாகூட நான் எங்கேயோ போயிருப்பேன்” என்று அபிஷேக் என்னை சிலாகிக்கும்போது மீண்டும் ஆரம்பத்திலிருந்து அபிஷேக்கைக் காதலிக்கத் தோன்றுவது பேருண்மை.
இன்று எங்கள் லட்சியத்தை நோக்கி ஒடிக்கொண்டிருக்கிறோம். ஆனால்; அடைந்தபாடில்லை. பணக்காரனா பாத்து கல்யாணம் பண்ணிருந்தா இன்னும் வசதியோடு வாழ்ந்திருப்பாய்தானே என்று என்னைப் பார்த்து அபிஷேக் கேட்கும் தருணங்களில் எல்லாம் இல்லை இல்லை நீதான் எனக்கேற்றவன் என்று நான் சொல்ல வெட்கத்தைப் புதுப்பித்துத் தருவதும் அந்தக் காதல்தான். பெரும்பாலும் நடிகராக அறியப்பட்டிருக்கும் அபிஷேக், சிறப்பாக பாடுவார் என்பதைத் தெரிய வைத்ததே எங்கள் காதல்தான்.


அபிஷேக் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா... கொழும்பில் நடந்த ஒரு லைட் மியூசிக் கச்சேரியில் நீங்களும் நானும் சிரித்துக்கொண்டே காதல் பிசாசே காதல் பிசாசே பாடலைப் பாடினோம். அந்தக் கணத்தில் உதிரிந்த சிரிப்பில் காதல் இருந்தது. அந்தக் கணத்தில் தோன்றிய காதல் பிசாசு நம்மை ஆசீர்வதித்தது. அந்த ஆசீர்வாதத்தோடுதான் இதைப் பகிர்ந்துகொள்கிறேன் ஐ லவ் யூ அபிஷேக்.

-கதிர்பாரதி


கல்கியில் பிரபலங்களின் காதல் 3

மலர் உங்களைக் கொலை செய்தாலும் ஆச்சர்யமில்லை....

காலம் எப்போதும் அகோரப் பசியோடு ஓடிக்கொண்டிருக்கும் ஓர் அரூப மிருகம். அதன் பசிக்கு எவன் தீணி இடுகிறானோ அவனையும் தோள்களில் தூக்கிக்கொண்டு ஓடும்; கொண்டாடிக் களிக்கும். தீணி இடுகிற திராணி இழந்துபோகிற கணத்தில் அவனைத் தூக்கி எறிந்துவிட்டு வேறொருவனை திறமையாளனை, தீணியாளனைச் சுமந்து ஓட ஆரம்பிக்கும். கால மிருகத்துக்கு நல்லவன் - கெட்டவன்; நியாயவாதி - அநியாயவாதி ஈரமானவன் – மூர்க்கமானவன்... என்கிற தர்ம கணக்கெல்லாம் தெரியாது. காலத்துக்கு மட்டுமல்ல காதலுக்கும் இது பொருந்தும். நிதானமாகச் சலசலத்து ஓடுகிற கிராமத்து வாழ்விலிருந்து பரபரப்பான நகரத்து வாழ்வுக்குள் வந்து விழுந்ததும் இதையெல்லாம் புரிந்து கொள்வதற்கு சென்னை நகரம் எனக்குத் தன் கோர முகத்தைக் காட்டத் தொடங்கி இருந்தது.

திருவண்ணாமலை அரசர் கல்லூரியில் கணிதம் படித்துவிட்டு கவிதைகளோடு கோடம்பாக்கத்துக்கு வந்த ஐந்தாம் ஆண்டு அது. வடபழநி சிக்னலுக்குக் காத்திருக்கிற ஒரு பேருந்தைப் பார்க்கிறேன். எனக்குள் ஆழ ஆழப் புதைந்திருந்த அதே முகம். என்னை உறங்கவிடாமல் பதறித் திரிய வைத்த நேசத்துக்குச் சொந்தமான முகம். என்னோடு கல்லூரியில் பயின்ற முகம். என் பேச்சுப்போட்டியில் நான் உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தைகளையும் மனனம் செய்து உசரித்த உதடுகளைக் கடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். சிக்னல் கிடைத்து அந்தப் பேருந்து கிளம்பும்போது என்னை அறியாமல் ஓடிப்போய் பின் படி வழியாக ஏறுகிறேன். நெரிசலில் பிதுங்கி ஒதுங்கி முன்னேறி அவளருகே போகும் பக்கத்தில் ஓர் ஆண். கணவனாக இருக்கலாம் அல்லது அண்ணனாகக்கூட இருக்கலாம். என்னை அந்த முகம் பார்க்கவில்லை. இதயத்தைப் பிடித்துக்கொண்டு நான்காவது நிறுத்தத்தில் இறங்கிவிட்டேன். ஆனால் அந்த நினைவுகளை என்னைச் செய்வதெனத் தெரியாமல் என் பாடல்களில் இறக்கி வைத்துக்கொண்டு இருக்கிறேன். அவளைப் பார்ப்பதற்காக அவளிருக்கும் தெருவுக்குப் போய்விட்டு தெருவை மட்டுமே பார்த்திருந்து வந்த ஞாபகங்கள் எல்லாம் என் நெஞ்சை வலிக்க செய்தது அந்த இரவு. மல்லாந்து படுத்திருந்தபோது என் கண்களில் அந்த நினைவுகள் உருகி வழிந்ததை மொட்டைமாடி அறியும்.
அவளிடம் ஆரம்பத்தில் காதலைச் சொல்லாமல் தவித்த நினைவுகளைத்தான்...
சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லாமல் தவிக்கிறேன் காதல் சுகமானது என்று என் பாடல் ஒன்றில் அந்த அவஸ்தையை இறக்கி வைத்தேன். என் சுமைகளை இறக்கி வைக்க பாடல்கள் கவிதைகள் என்கிற சுமைதாங்கியை காலம் தந்திருக்கிறது. இன்னும் எத்தனையோ எத்தனை ஜீவன்களுக்கு காலம் தன் இரக்கமற்ற கோர முகத்தைத்தானே காட்டுகிறது.
நமது சமூகம் காதலுக்குப் போட்டிருக்கும் வேலி மிகமிக மோசமானது. அதை இன்னும் புதைபொருளாகத்தான் பாக்கிறது. கேட்பாரற்று கிடக்கிற இரும்புத் துண்டு ஒன்றை காந்தச் சக்தி தீண்டியதும் அது மின்சாரத்தைக் கடத்துவதைப் போல மனசைக் காதல் தீண்டுகிறபோது அதை ஆக்கபூர்வமாக மாற்றிக்கொள்ளும் மனநிலையை சமூகம் சரிவரக் கற்றுத் தரவில்லை. அதனாலதான் பிஞ்சிலே சில குருத்துகள் தங்களைத் தற்கொலையில் கருக்கிக்கொள்ளும் அவலம் நேறுகிறது. திரையில் ரசிக்கிற காதலை குடும்பத்துக்குள் அனுமதிக்க மறுக்கிற மனம் சரியான மனம்தானா என்பது சந்தேகத்துக்கு உரியது.

இப்படி வலிக்கச் செய்யும் காதல் ஒன்று இருந்தாலும் நினைத்தவுடன் நான் சிரித்துவிடுகிற நேசம் எனக்குள் இன்றும் பசுமையாக இருக்கிறது.
ஏழாவது வரைதான் நான் என் பூர்விகக் கிராமம் வேடங்குளத்தில் படித்தேன். பின்பு எங்கள் படிப்புக்காகவே சாத்தனூர் அணைக்கு வயல்கள் சூழ்ந்த இடம் ஒன்றை வாங்கி வீடு கட்டிக்கொண்டு வந்து விட்டோம். அங்கிருந்தான் நான் கல்லூரிக்குச் செல்வேன். அணையைப் பராமரிக்கும் பணிக்காக ஒரு வட இந்திய குடும்பம் ஒன்று எங்கள் ஊருக்கு வந்தது. அந்தக் குடும்பத்தின் அழகான பெண் ஒருத்தியால எங்கள் ஓரே அழகானது. இப்போதும் மனம் அவளை அழகி என்றுதான் சொல்கிறது. பன்னிரண்டாம் வகுப்பு படிப்பதற்காக எங்களூர் பள்ளியில் அவள் சேர்ந்தபோது ஆசிரியர்கள் கூட அழகாக உடை அணிய ஆரம்பித்தார்கள். மணமாகாத ஒரு ஆசிரியர் அவளுக்கு காதல் கடிதம் கொடுத்ததாகக் கூட பின்னர் எனக்குத் தெரிய வந்தது. எனக்கு எப்படி தெரிய வந்தது என்கிறீர்களா? நானும் காதல் கடிதம் கொடுத்தேனே.

அவள் பள்ளிக்குச் செல்வது எங்கள் வீட்டு வழியாகத்தான். பேருந்தின் வலது பக்க இருக்கையில் உட்கார்ந்தால் ஜன்னல் வழியாக எங்கள் வீட்டைப் பார்க்கலாம். அப்படி யதார்த்தமாக பார்க்கும்போதுதான் எங்கள் பார்வைகள் பற்றிக்கொண்டன. எங்களுக்கு பறவைகள் சடசடத்துப் பறந்து அலைகள் சடார்சடார் என மோதி, மான்களின் கூட்டம் துள்ளிக்குதித்து, பாரதிராஜா படத்தின் வெள்ளுடைத் தேவதைகள் வந்து பூமாறி தேன்மாறி பொழிந்தார்கள்.

காதல் நெருப்பை ஊதி வளர்த்து விடுவதற்கென்றே இயற்கை செய்து வைத்திருக்கும் ஏற்பாடுதான் நண்பர்கள்போல. என் நண்பன் கோவிந்தன். ”டேய் மச்சான் அந்தப் புள்ள உன்னைத்தாண்டா பாக்குது. நீ பட்டிமணர்த்துல பேசுற கேசட்ஸ் எல்லாம் வாங்கி வெச்சுருக்காம்; பத்திரிகையில உன் கவிதைகள் வந்த பக்கத்தையெல்லாம் கட் பண்ணி வெச்சுருக்காம். அதனால அவ லவ் பண்றது கன்ஃபர்ம்” என்று ஊதிவிட்டான். காதல் ஆகுதி எனக்குள் திகுதிகுன்னு வளர எப்படியாவது சொல்லிவிட வேண்டுமென்று திட்டம் போட ஆரம்பித்தேன். முதல்முதலாக ஒரு காதல் கடிதம் எழுதுகிறேன். விடலைக்குரிய கிலுகிலுப்போடு ஆரம்பித்த அந்தக் கடித்தத்தை உன் கன்னங்களில் பதியத் துடிக்கும் உதடுகளின் உரிமையாளன் என்று முடித்து கையெழுத்துப் போட்டிருந்த்ந்ந்ன். அதைக் கொண்டுபோய் கொடுப்பதற்கு மட்டும், ஒரு வாரத்தில் இருந்து பத்து நாட்கள் ஆனது. காரணம், அவள் குடும்பத்தோடு அநேக சினேகமாக இருந்தார்கள் எங்களூர் போலீஸ்காரர்கள். அவள் அவர்களை அண்ணன் என்று அழைக்கும் அளவுக்கு பழக்கம். அந்த அண்ணன்கள் படுத்திய பாடு காதல் அவஸ்தைக்கு நிகரானது. கோவிந்தன், நான் நாளைகு வர்றேன் மச்சான் வா என்ன நடக்குதுன்னு பார்ப்போம் என்று கொம்புசீவி விட்டான். மறுநாள் நான் மட்டும்தான் அவளை பள்ளியில் சந்தித்து கடிதம் தந்தேன். அவள் எனக்குப் பயமா இருக்கு என்று சொல்லிவிட்டாள். மறுநாள் என்னைப் பார்த்த கோவிந்தன் சொன்னான், ”மாப்ள நேத்து நான் வரலாம்னுதான் பார்த்தேன். ஆனா சகுனம் சரியில்லை’’ அப்புறம் அந்த நேசம் காலப் போக்கில் கோவிந்தாவானது வேறு கதை.
வேட்டைக்காரன் படத்தில்

ஒரு சின்ன தாமரை
என் கண்ணில் பூத்ததே.
அதன் மின்னல் வார்த்தைகள்
என் உள்ளம் தேடி
தைக்கின்றதே..

இதை உண்மை என்பதா
இல்லை பொய்தான் என்பதா..
என் தேகம் முழுவதும்
ஒரு வெண்மீன் கூட்டம்
மொய்க்கின்றதே.

இந்த அனுபவம் உண்மை; அது தரும் வலிகளும் உண்மை. இப்படி ஒரு சிரித்துக்கொள்ளவும் வலித்துக் கொள்ளவும் நல்மனம் வாய்க்கப் பெற்ற எல்லாருக்கும் ஒன்றிரண்டு காதல்களை காலம் வழங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

இதோ நதியிலிருந்து ஒரு மலர் தண்ணீரின் போக்கில் மிதந்து வருகிறது. வருகிற வழியெங்கும் சின்னதும் பெரிதுமாக சுழல்களில் சிக்கிக் சுழன்றுகொண்டே வருகிறது. ஏதோ ஓர் படித்துறை நீராடிக்கொண்டிருக்கும் உங்கள் கையில் அந்த மலர் சேர்ந்தால் ஏந்திக்கொள்ளுங்கள் அல்லது நீரின் போக்கில் போகவிடுங்கள். எடுத்துக் கரையில் போட்டுவிடாதீர்கள். பிறகு அந்த மலரைத் தாண்டி ஒருபோதும் உங்களால் கடந்து போக முடியாது; தவிர அந்த மலர் உங்களைக் கொலை செய்தாலும் ஆச்சர்யமில்லை.... 

-கதிர்பாரதி
பிரபலங்களின் காதல் கல்கி யில்  2